மலையக ரயில் தடம்புரண்டது : சேவைகளில் பாதிப்பு
| | |

மலையக ரயில் தடம்புரண்டது : சேவைகளில் பாதிப்பு

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை  (29) சேவையிலிருந்த ரயில் தடம் புரண்டதால், மலையக  ரயில்  சேவைகள்  தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி  ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. பொடிமனிக்கே ரயிலின் என்ஜின் பகுதியும் பின்பெட்டியுமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. மேலும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும்  ரயில்ப்பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், ரயில்வே போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே  கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்
| | |

மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர்  நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை   சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட  ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.