சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபையமர்வுகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டது.

அவர் உரையாற்றும் போது அரச தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு கடும் கூச்சலிட்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட சிலர் தனது இடத்தில் இருந்து எழுந்து சஜித் பிரேமதாசவிற்கு முன்னால் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் வந்து இடையூறு செய்ததன் காரணமாக 05 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணியளவில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *